Advertisement

மரணத்தை விட கொடியது புறக்கணிப்பு’ – அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன்”

சென்னை: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) முன்னாள் அமைச்சர் வைகை செல்வன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு தலைவர் தானே அழிந்தாலும் தனது கொள்கைகளும் இயக்கமும் வெற்றி பெற வேண்டும் என்று எண்ணுவார். ஆனால், இயக்கமும் கழகத் தொண்டர்களும் பாதிக்கப்பட்டாலும், தாம் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் நல்ல தலைவராக இருக்க முடியாது என்று விமர்சித்துள்ளார்.

மேலும், திமுகவுடன் இணைந்து ஆட்சியமைக்க திட்டமிட்டதன் மூலம், திமுக எதிர்ப்பு என்ற அதிமுகவின் அடிப்படை அரசியல் நிலைப்பாடு சமரசப் போக்காக மாறி, கட்சி தனது அடையாளத்தை இழந்துவிட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். சரியான நேரத்தில் தவறான முடிவுகள் எடுக்கப்பட்டதால், வெற்றிப் பாதையில் இருந்து அதிமுக விலகிச் சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

தேர்தல் களத்தில் தாம் தனித்து விடப்பட்ட நிலையிலும், கட்சிக்காக முழுமையாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டுள்ள வைகை செல்வன், அதற்குப் பதிலாக புறக்கணிப்பையே சந்திக்க நேரிட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.

மரணத்தை விடக் கொடியது புறக்கணிப்பு என்பதை நான் உணர்ந்துகொண்டேன்” என்ற உருக்கமான வாசகத்துடன் தனது அறிக்கையை நிறைவு செய்துள்ள அவர், அதிமுகவிலிருந்து விலகும் முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *